ரயில்வே கால அட்டவணையில் டிசம்பர் வரை மாற்றம் இல்லை
ரயில்வே கால அட்டவணையில் டிசம்பர் வரை மாற்றம் இல்லை
ADDED : மே 18, 2025 04:07 AM
சென்னை: 'நாடு முழுதும் விரைவு ரயில்களுக்கான கால அட்டவணையில், வரும் டிசம்பர் வரை மாற்றம் இல்லை' என, ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
ரயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில், விரைவு, பயணியர் ரயில்களுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும்.
இதில், அந்தந்த மண்டலங்களில் புதிய ரயில்கள் இயக்கம், கூடுதல் நிறுத்தங்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெறும்.
தெற்கு ரயில்வேயில், பயணியர் நல சங்கங்கள், எம்.பி.,க்கள் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, 'வந்தே பாரத்' ரயில்களை கூடுதலாக இயக்க வேண்டும்; குறுகிய துார பயணியர் ரயில்கள், மின்சார ரயில்களை அதிகரிக்க வேண்டும்; தென்மாவட்ட வழித்தடத்தில், 'அம்ரித் பாரத்' ரயில் சேவை துவங்க வேண்டும் என, பல தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
அதெல்லாம் புதிய கால அட்டவணை அறிவிப்பில் இடம்பெறும் என்றும் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், நாடு முழுதும் ரயில்களுக்கான கால அட்டவணையில், வரும் டிசம்பர் வரை எந்த மாற்றமும் இல்லை என, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுஉள்ளது.
அதுவரை, தற்போதுள்ள கால அட்டவணை நீட்டிக்கப்படுவதாகவும் நேற்று முன்தினம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வே திட்டப்பணிகள் முடியும்போது, உடனடியாக அந்த தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கம், கூடுதல் நிறுத்தம் போன்றவற்றை உடனுக்குடன் அமல்படுத்தி வருகிறோம். முன்னர் போல, புதிய கால அட்டவணைக்காக காத்திருப்பது இல்லை.
வாரியத்தின் உத்தரவின்படி, சில நிர்வாக காரணங்களுக்காக, டிசம்பர் மாதம் வரை தற்போதுள்ள கால அட்டவணை தொடரும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.