ADDED : ஜூலை 04, 2025 12:40 AM
சென்னை:'மருத்துவ கல்வியின் தரம் மற்றும் நெறி சார்ந்த நடவடிக்கைகளில், எந்த சமரசத்துக்கும் இடமில்லை' என, தேசிய மருத்துவ ஆணையமான, என்.எம்.சி., வலியுறுத்தி உள்ளது.
நாடு முழுதும், மருத்துவ கல்லுாரிகளின் அங்கீகாரத்தை புதுப்பிக்கவும், புதிதாக விண்ணப்பிக்கவும், தேசிய மருத்துவ ஆணையத்தின் ஒப்புதல் அவசியம்.
அதன்படி, குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை, மருத்துவ கல்லுாரிகளில், திடீர் ஆய்வுகளை மருத்துவ ஆணையம் நடத்துகிறது. இந்நடவடிக்கைகளில், பல்வேறு மருத்துவ கல்லுாரிகளின் பேராசிரியர்கள், பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.
அவர்கள், தர மதிப்பீட்டாளர்களாக, அப்பணி களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு, ஒரு கல்லுாரியில் ஆய்வு செய்ய, 48 மணி நேரத்துக்கு முன்னதாக, தகவல் தெரிவிக்கப்படும்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில், ஒரு மருத்துவ கல்லுாரிக்கு சாதகமாக, தர மதிப்பீடு அளிக்க, 10 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, மருத்துவ பேராசிரியரை, சி.பி.ஐ., கைது செய்தது.
இதில் வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு:
மருத்துவ கல்வியின் தரம் மற்றும் நெறிசார்ந்த நடவடிக்கைகளில், எந்த சமரசத்துக்கும் இடமில்லை. மதிப்பீட்டாளர்கள், மருத்துவ கல்லுாரிகளில் இருந்து, தேர்வு செய்யப்படுகின்றனரே தவிர, நேரடியாக ஆணையத்தால் நியமிக்கப்படுவதில்லை.
விதிகளுக்கு உட்பட்டும், நெறி சார்ந்தும், தொழில் முறையாகவும் செயல்படுவதை, அனைத்து மருத்துவ கல்லுாரிகளும், பேராசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.