கூட்டணியில் குழப்பம் வருமா: இல்லை என்கிறார் திருமா
கூட்டணியில் குழப்பம் வருமா: இல்லை என்கிறார் திருமா
ADDED : மார் 02, 2024 04:44 PM

சென்னை: '' தி.மு.க., உடனான கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அக்கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம் '' என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் கூட்டத்திற்கு பிறகு நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
கூட்டணி பேச்சுவார்த்தைக்கு மீண்டும் நேரம் ஒதுக்குமாறு கூறியுள்ளோம். தேவைப்பட்டால் முதல்வர் ஸ்டாலினை சந்திப்போம். உயர்நிலை குழுக்கூட்டத்தில், 4 தொகுதிகளை கேட்ட நிலையில் மூன்றையாவது வாங்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
தி.மு.க., உடனான கூட்டணியில் குழப்பம் இல்லை. இது கொள்கை ரீதியிலான கூட்டணி. இக்கூட்டணியில் இணைந்து தான் தேர்தலை சந்திப்போம். தேசிய அளவில் ' இண்டியா' கூட்டணியில் நீடிக்கிறோம் என்பது உறுதி. தற்போது அவசரம் ஏதும் இல்லை. தொகுதி கேட்பது எங்களது உரிமை. யூகங்களுக்கு இடமில்லை.
தி.மு.க., கூட்டணி கடசிகளுக்கு எந்த இடைவெளியும் ஏற்படாது. தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம். எங்களின் வலிமையை ஸ்டாலின் அறிவார். தி.மு.க., கூட்டணி உறுதியாக உள்ளது. சிறிய கட்சி கூட வெளியேறாது. பா.ஜ., அ.தி.மு.க., அமைதியாக உள்ளதால், தி.மு.க., கூட்டணி பக்கம் மீடியாக்களின் கவனம் திரும்பி உள்ளது. கூட்டணியில் பிளவு வரும் என இலவு காத்த கிளியாக யாரும் காத்திருக்க வேண்டியது இல்லை. தி.மு.க., கூட்டணியில் தான் விசி தேர்தலை சந்திக்கும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

