நயினாருக்கு ஆதரவாக பணம் பட்டுவாடா: கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி., தகவல்
நயினாருக்கு ஆதரவாக பணம் பட்டுவாடா: கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி., தகவல்
ADDED : ஜூலை 17, 2025 11:24 PM
சென்னை:'லோக்சபா தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய, பா.ஜ., நிர்வாகிகள் முயற்சி செய்தனர்' என, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், சி.பி.சி.ஐ.டி., தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரலில், லோக்சபா தேர்தலின் போது, நெல்லை தொகுதியில் போட்டியிட்ட, பா.ஜ., வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணிபுரியும் மூன்று பேர், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் எடுத்து சென்ற 4 கோடி ரூபாயை, தேர்தல் கமிஷனின் பறக்கும் படையினர் மற்றும் தாம்பரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, ஹவாலா தரகர் சூரஜ் என்பவரை கைது செய்தனர். அவர் ஜாமின் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை, நீதிபதி கார்த்திகேயன் விசாரித்தார்.
மனு மீதான விசாரணையின் போது, 'பா.ஜ., நிர்வாகி கோவர்தன், தங்க கட்டிகளுக்கு பதிலாக, 97.92 லட்சம் ரூபாய் பணத்தை, ஹவாலா தரகர் சூரஜுக்கு கைமாற்றி உள்ளார். பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், அமைப்பு செயலர் கேசவவிநாயகன், பா.ஜ., நிர்வாகி கோவர்தன் ஆகியோர், நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக, தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயற்சித்துள்ளனர்.
'இந்த தகவல், மொபைல் போன் தொடர்பு தகவல் சேகரித்தல் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது' என, சி.பி.சி.ஐ.டி., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி, 'மனுதாரர் சூரஜுக்கு ஜாமின் வழங்கப்படுகிறது. நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, அவர் தினமும் காலை 10:00 மணிக்கு, சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி, போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்கக் கூடாது' என, நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

