தனியார் நிபுணர்கள் தேவையில்லை ரியல் எஸ்டேட் ஆணையம் திட்டவட்டம்
தனியார் நிபுணர்கள் தேவையில்லை ரியல் எஸ்டேட் ஆணையம் திட்டவட்டம்
UPDATED : நவ 01, 2026 12:00 AM
ADDED : அக் 31, 2026 11:06 PM
சென்னை: ‘திட்டம் மற்றும் கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க, தனியார் நிபுணர்களை நியமிக்க வேண்டிய அவசியம் எழவில்லை’ என, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து உள்ளது.
அடுக்குமாடி குடி யிருப்பு திட்டங்களை பதிவு செய்யும்போது, அதற்கான பதிவு நடைமுறையில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, ஆவணங்களை, தனியார் வல்லுநர்கள் வாயிலாக சரிபார்த்து, காலதாமதத்தை தவிர்க்க வேண்டும் என, நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.
இதற்கு, ஆணையம் அளித்துள்ள விளக்கம்:
ஆணையத்தின் திட்டப்பிரிவில், திட்டம் மற்றும் கட்டடம் அனுமதி வழங்கும் துறையில் பணியாற்றிய, விரிவான அனுபவமுள்ள அலுவலர்களும், உரிய துறைசார் அறிவும் அனுபவமும் கொண்ட பணியாளர்களும் உள்ளனர்.
எனவே, விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்காக, தனியார் நிபுணர்களை நியமிக்க வேண்டிய அவசியம் எழவில்லை.
மேலும், தனியார் நிபுணர்களை பயன்படுத்தும் நடைமுறை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
விண்ணப்பங்களில் முழுமையின்மை மற்றும் நில ஆவணங்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட நில அளவுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் இருப்பதும், தாமதத்திற்கு காரணம்.
அத்துடன், உட்கட்டமைப்பு வசதிகள் குறித்த போதிய ஆவணங்கள் இல்லாமை போன்ற காரணங்களால், சில விண்ணப்பங்களின் பரிசீலனையில் காலதாமதம் ஏற்படுகிறது.
விண்ணப்ப பரிசீலனை நடைமுறைகளை எளிமைப்படுத்தி, விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை, குழுமம் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
