போகிற வருகிறவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல தேவையில்லை: சந்தானம் பாடல் சர்ச்சைக்கு சந்தானம் பதில்
போகிற வருகிறவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல தேவையில்லை: சந்தானம் பாடல் சர்ச்சைக்கு சந்தானம் பதில்
ADDED : மே 15, 2025 02:26 AM

சென்னை:நடிகர் சந்தானம் நடித்த, டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில், ஹிந்து கடவுள் பெருமாளை கிண்டல் செய்யும் பாடல் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் குறித்து காலங்காலமாக உணர்வுப்பூர்வமாக பாடப்படும், 'சீனிவாசா… கோவிந்தா...' என்ற பாடல் மெட்டில், இப்படத்தின் பாடல் அமைந்துள்ளது.
இதுகுறித்து, தமிழகம் மற்றும் ஆந்திரா போலீசில் புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, நடிகர் சந்தானம் அளித்த பதில்:
நான் திருப்பதி பெருமாள் பக்தன். ஒவ்வொரு பட வெளியீட்டின்போதும், திருப்பதிக்கு வேண்டுதலாக நடந்து செல்வேன்.
இந்த படம் வெளியாகும்போதும் செல்வேன். நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். இந்த படப் பாடலில் பெருமாளையோ, கோவிந்தா பாடலையோ கிண்டல் செய்யவில்லை.
திரைப்பட தணிக்கைத் துறையான, 'சென்சார்' மற்றும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே, அந்த பாடல் இருக்கிறது. அவர்களுக்கு பதில் சொன்னால் போதும். அவர்கள் சில விஷயங்களை கூறியுள்ளனர். அதை பாடலில் பின்பற்றியுள்ளோம். போகிற வருகிறவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை.
என் படத்தில், பெருமாள் பாடல் வர வேண்டும் என்பதற்காக, அந்த பாடலை வைத்தோம். 'டிரெய்லர்' எனும் முன்னோட்ட காட்சியை மட்டும் பார்த்து விட்டு, எந்த முடிவும் செய்ய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், 'அப்பாடலை படத்தில் இருந்து நீக்காவிட்டால், தமிழக மக்கள் பிரதிநிதிகள், திருப்பதிக்குள் நுழைய முடியாது' என, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்; திருப்பதி போலீசிலும் புகார் கொடுத்துள்ளனர்.
அதேபோல், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் உறுப்பினரும், ஆந்திர பா.ஜ., செய்தித் தொடர்பாளருமான பானு பிரகாஷ் என்பவரும், இந்த பாடலை நீக்குமாறும், 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டும், படத்தை தயாரிக்கும் நிறுவனத்துக்கு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
படத்தை தயாரித்து வருவது, நடிகர் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது.