ADDED : அக் 12, 2025 12:48 AM
திருச்செங்கோடு: ''அ.தி.மு.க.,வை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை,'' என்று, மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில், அக்கட்சி பொது செயலர் பழனிசாமி கூறினார்.
கொ.ம.தே.க., - தி.மு.க., உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளை சேர்ந்தவர்கள், அ.தி.மு.க.,வில் இணையும் விழா, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்தில் பல கட்சிகள் உள்ளன. ஆனால், அ.தி.மு.க.,வுக்கும் மற்ற கட்சிகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அ.தி.மு.க.,வில் மட்டும் சாமானியனும் உயர்ந்த நிலைக்கு வர முடியும். மாற்று கட்சியில் இருந்து வருபவர்களுக்கும் பாதுகாப்பு, பதவி கிடைக்கும். உழைப்பவர்களுக்கு மட்டுமே அ.தி.மு.க.,வில் மரியாதை.
அ.தி.மு.க., ஆட்சியில் திருச்செங்கோடு நகரை மையமாக கொண்டு ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில், நான்கு வழிச்சாலை உள்ளிட்ட சாலை விரிவாக்க பணிகள் செய்யப்பட்டுள்ளன. 400 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர் திட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
திருச்செங்கோடில் இணைப்பு நிகழ்ச்சி நடப்பதால், இந்த ஊருக்கு அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட நல திட்டங்கள் குறித்துச் சொன்னேன். இதே போலத்தான், தமிழகம் முழுதும் எல்லா ஊர்களுக்கும் நிறைய திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளோம்.
மற்ற கட்சிகளை நம்பி, அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றோர், அங்கு ஏன் சென்றோம் என ஒவ்வொரு நாளும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
காரணம், அங்கு அவர்களுக்கு ஏற்றமோ, மரியாதையோ இல்லாதது தான். அதனால் தான் திரும்பத் திரும்ப சொல்கிறேன், அ.தி.மு.க.,வை நம்பி யாரும் எப்பவும் கெட்டதில்லை.
அப்படி யாரேனும் கெட்டுப் போனதாக உதாரணம் காட்டினால், அவர்களுக்கும் ஏற்றம் அளிக்க வேண்டியது என்பொறுப்பு. அதனால், அ.தி.மு.க.,வை நம்பி, எந்த கட்சியினரும் தைரியமாக அரசியல் செய்ய வரலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.