ADDED : செப் 15, 2025 08:52 PM

சென்னை: அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளது திமுக அரசுக்கான அபாயமணி என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் வரும் அக்டோபர் மூன்றாவது வாரத்தில் இருந்து துவங்கும் வடகிழக்குப் பருவமழையானது அதிகம் பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் எனவும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் திமுக அரசுக்கான அபாயமணி.
மழைக்காலம் துவங்கும் வரை மெத்தனமாக இருந்துவிட்டு, வெள்ளத்தில் மூழ்கிய பிறகு ஆய்வு என்னும் போர்வையில் போட்டோ நடத்தும் திமுக அரசின் நிர்வாகக் குளறுபடிகளால் தங்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் மீண்டும் இழக்கும் தெம்பும் திராணியும் மக்களுக்கு இல்லை.
வெற்று விளம்பரங்களை விடுத்து, வரவிருக்கும் பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் திமுக அரசு உடனடியாகத் துரிதப்படுத்த வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைப்பது. தமிழகத்தின் நீர்நிலைகளைத் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்துவது. முறையான பராமரிப்பின்றி ஆங்காங்கே சிதைந்து கிடக்கும் மின்கம்பங்களை சரி செய்வது உள்ளிட்ட மழைநீர் வடிகால் பணிகளையும் பராமரிப்புப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடுவதன் மூலம், உயிர்ச்சேதங்களையும் பொருட்சேதங்களையும் தவிர்க்கலாம்.
ஒரு கார் ரேஸ் நடத்துவதற்காக மொத்த நகரையும் ஒரு சில தினங்களில் புரட்டிப் போட்ட திமுக அரசால், அதே வேகத்தில் மழைநீர் வடிகால் பணிகளையும் மேற்கொள்ள முடியும் என நம்புகிறேன். எனவே. “வருமுன் காப்பது சிறந்தது' என்பதையுணர்ந்து முழு முன்னேற்பாடுகளுடன் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு தயாராக வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

