விலகியது வடகிழக்கு பருவக்காற்று; வானிலை ஆய்வு மையம் தகவல்
விலகியது வடகிழக்கு பருவக்காற்று; வானிலை ஆய்வு மையம் தகவல்
ADDED : ஜன 28, 2025 05:51 AM

சென்னை : 'தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில், 104 நாட்களாக நீடித்த வடகிழக்கு பருவக்காற்று முழுமையாக விலகியது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தின் ஆண்டு மழை தேவையில், பெரும் பகுதியை வடகிழக்கு பருவமழை பூர்த்தி செய்கிறது.
104 நாட்கள் நீடிப்பு
பொதுவாக அக்டோபர் இரண்டாவது வாரத்தில் துவங்கும் வடகிழக்கு பருவ மழை, டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி இரண்டாவது வாரத்தில் முடிவுக்கு வரும்.
அந்த வகையில், 2023 அக்., 16ல் துவங்கிய வடகிழக்கு பருவமழை, 2024 ஜன., 16ல் விலகியது. அந்த ஆண்டு, 93 நாட்கள் வடகிழக்கு பருவமழை நீடித்தது.
கடந்த ஆண்டு அக்டோபர், 15ல் துவங்கிய வடகிழக்கு பருவமழை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இம்முறை, 104 நாட்கள் பருவமழை நீடித்துள்ளது.
முன்னதாக, 2005ல், 97 நாட்கள் வடகிழக்கு பருவமழை நீடித்தது. இதுதான் அதிக நாட்கள் என்று கருதப்பட்டு வந்த நிலையில், இம்முறை, 104 நாட்கள் வடகிழக்கு பருவமழை நீடித்துள்ளது.
இந்த பருவ காலத்தில், இயல்பைவிட, 33 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. ஜன., 1 முதல் 27 வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இருப்பினும் நிர்வாக நடைமுறை காரணமாக, இந்த மழை குளிர்கால மழை கணக்கில் சேர்க்கப்படுகிறது.
30 முதல் கனமழை
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும் நாளையும் வரை, வறண்ட வானிலை காணப்படும். காலை லேசான பனி மூட்டம் காணப்படும்.
வரும் 30ம் தேதி, தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி மாவட்டங்களில், ஒருசில இடங்களில் கனமழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும் வானம் மேகமூட்டமாக காணப்படும். காலை லேசான பனி மூட்டம் காணப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.