ADDED : ஜன 09, 2024 10:24 PM
'பிரதமர் மோடிக்கு நிகர் யாருமில்லை' என கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரத்திற்கு, தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.
'லோக்சபா தேர்தலில், மின்னணு ஓட்டு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டாம்; ஓட்டுச் சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்' என, காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி.,யிடம் இந்த கோரிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கார்த்தி, 'மின்னணு ஓட்டு இயந்திரங்களை, எந்த நெட்வொர்க் வாயிலாகவும் மோசடியாக இயக்க முடியாது. மோடியின் பிம்பத்தை உடைப்பது கடினம். பிரதமர் மோடிக்கு நிகரான தலைவர் யாருமில்லை' என்றார்.
காங்கிரஸ் தலைவர்களான கார்கே, ராகுல் போன்றவர்கள் கூட மோடிக்கு நிகரான தலைவர் இல்லை என்பது போல கார்த்தி சிதம்பரம் கூறியது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் எதிர்ப்பாளர்கள், கார்த்தியை கட்சியிலிருந்து நீக்க வலியுறுத்தி, போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். அதனால், இந்த விவகாரத்தில் கார்த்தியிடம் விளக்கம் கேட்க, தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு முடிவெடுத்தது. அதன்படி, கார்த்திக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. அதில், 10 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி கார்த்தியை அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
கார்த்தி இது குறித்து கூறுகையில்.
''என்னிடம் விளக்கம் கோரும் எந்த நோட்டீசும், ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம் இருந்து எனக்கு வரவில்லை,'' என்றார்.
- நமது நிருபர் -

