தமிழக பா.ஜ., வேட்பாளர்கள் மூன்று நாட்களில் அறிவிப்பு
தமிழக பா.ஜ., வேட்பாளர்கள் மூன்று நாட்களில் அறிவிப்பு
ADDED : மார் 17, 2024 06:14 AM
சென்னை : 'தமிழகத்தில், மிக வேகமாக தேர்தல் நடத்தப்படுவது பணப்புழக்கத்தை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்கும் என்று கருதப்படுகிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஓட்டுப்பதிவுக்கு குறைந்த நாட்களே உள்ளன. வேட்புமனு தாக்கல் முடிந்து பிரசாரத்திற்கு, 18 நாட்கள் தான் உள்ளது. இது, எல்லா கட்சிகளுக்கும் சமமாக இருக்கும்.
தமிழகத்தில், நேர்மையாக, நாணயமாக, பணபலம் இல்லாத வகையில் நடக்கும் முதல் தேர்தலாக இருக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் முதலில் வெளியிட்ட அறிவிப்பில், விளவங்கோடு, திருக்கோவிலுார் இடைத்தேர்தல் அறிவிப்பு இருந்தது. திருத்திய அறிவிப்பில் திருக்கோவிலுார் இடம்பெறாதது குறித்து விளக்கம் கேட்டிருக்கிறோம். விளவங்கோடு இடைத்தேர்தலுக்கும் சேர்த்து, அனைத்து தமிழக பா.ஜ., வேட்பாளர்களும் மூன்று தினங்களுக்குள் அறிவிக்கப்படுவர். வேகமாக கூட்டணி அமைந்து விடும்.
சேலத்திற்கு பின்பும் பிரதமர் வருவார். சரியான நேரத்தில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் மேடை ஏற்றப்படுவர். தமிழகத்தில் தேர்தல் நடக்கும் போது அதிக பணம் புழங்குகிறது. தமிழகத்தில், மிக வேகமாக தேர்தல் நடத்தப்படுவதே பண புழக்கத்தை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்கும் என, கருதப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

