இனி வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்; மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக செயலி
இனி வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்; மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக செயலி
ADDED : செப் 09, 2025 06:29 AM

சென்னை; உபகரணங்கள் பெற, மாற்றுத்திறனாளிகள், இனி வீட்டிலிருந்தபடியே விண்ணப்பிக்கும் வகையில், 'திறன்' இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலியை வடிவமைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர், காதொலி கருவிகள் உட்பட, 27 வகை உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
இவற்றை பெற விரும்புவோர், உரிய மருத்துவ ஆவணங்களுடன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
இம்முறையில் விண்ணப்பிக்க மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுவதால், அரசு தரப்பில், தற்போது மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இனி வீட்டிலிருந்தபடியே, உதவி உபகரணம் பெற விண்ணப்பிக்கும் வகையில், 'திறன்' இணையதளம் மற்றும் மொபைல் போன் செயலி வடிவமைக்கப்பட உள்ளது. அரசு தரப்பில் வழங்கப்படும் உதவி உபகரணம் குறித்த, அனைத்து தகவல்களும், 'திறன்' இணையதளம் மற்றும் செயலியில் இடம்பெறும்.
இதற்கிடையில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நடத்திய, 470 முகாம்கள் வழியாக அடையாள அட்டை, உதவி உபகரணம் உட்பட, 10க்கும் மேற்பட்ட சேவைகளை பெற, 16,452 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்துள்ளனர்.