234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் முகத்துக்காக ஓட்டு விழுமா; சீமான் பதில்
234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் முகத்துக்காக ஓட்டு விழுமா; சீமான் பதில்
ADDED : ஆக 22, 2025 10:31 PM

சென்னை: அனைத்து தொகுதிகளிலும் நடிகர் விஜய் முகத்துக்காக ஓட்டு விழுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி;
போட்டி போட்டி என்று எல்லாரும் சொல்லலாம். நானும் திமுகவும் போட்டி என்று சொல்லலாம். அதிமுக எங்களுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என்று சொல்கிறது. தம்பியும் (நடிகர் விஜய்) அதே தான் சொல்கிறார்.
ஒரு எளிய கேள்விதான். ஒரு சித்தாந்தத்தை ஏற்கனவே முன் வைக்கப்பட்டு அது மக்களால் ஏற்கப்பட்ட, அது சித்தாந்தமாக ஏற்கப்பட்டதா அல்லது எப்படி ஏற்கபட்டதா என்பது வேறு. 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிற ஒரு சித்தாந்த கோட்பாடு திராவிடம், திமுக.
இந்த சித்தாந்தம், கொள்கை கோட்பாடுகள் அதை தாண்டி ஆக சிறந்த ஒன்றை வைத்து தான் அதை வீழ்த்த முடியுமே ஒழிய, ஒரு சித்தாந்தத்தை ஒரு சினிமா வந்து வீழ்த்திவிட முடியாது.
அவர்கள் திராவிடம் என்ற கோட்பாட்டை வைக்கின்றனர். நாங்கள் தமிழ் தேசியம் என்ற மாற்று கோட்பாட்டை வைக்கிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் என்ன வேறுபாடு என்று சொல்கிறோம்.
வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று சொன்னீர்கள். ஆனால் இன்றைக்கு வீழ்வது தமிழாக இருந்தாலும் வாழ்வது நாமாக இருக்கட்டும் என்று மாற்றிவிட்டீர்கள். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று சொன்னீர்கள். இப்போது எங்கேயும் இல்லை தமிழ் என்ற நிலைக்கு வந்துவிட்டது.
விஜய் பேசும் போது நான் முன் வைக்கிற கருத்துக்கு வாக்கு செலுத்துங்கள் என்று கேட்கவில்லை. முகத்துக்கு வாக்கு செலுத்துங்கள் என்று கேட்கிறார்.
இந்த முகம் இன்று இருப்பது போல் இன்னும் 5 வருஷம் கழித்து இருக்காது. 234 தொகுதிகளிலும் அவரது முகத்துக்கு வாக்கு செலுத்துவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு சீமான் பேட்டியில் கூறினார்.