'தாட்கோ' திறன் மேம்பாட்டு பயிற்சி பயனாளிகள் எண்ணிக்கை 51 சதவீதம் சரிவு
'தாட்கோ' திறன் மேம்பாட்டு பயிற்சி பயனாளிகள் எண்ணிக்கை 51 சதவீதம் சரிவு
UPDATED : ஆக 24, 2025 02:49 AM
ADDED : ஆக 24, 2025 02:48 AM

'தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், தாட்கோ சார்பில் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி, 51 சதவீதம் குறைந்துள்ளது' எ ன, குற்றச்சாட்டு எழுந்து உ ள்ளது.
'தாட்கோ' எனப்படும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, 'ட்ரோன்' இயக்குதல், அழகு கலை, ஹோட்டல் நிர்வாகம் என, 10க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.
இதில் சேர, பெற்றோரின் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த, ஆண்டுதோறும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்நிதி முழுமையாக செலவிடப்படுவதில்லை.
தாட்கோ வாயிலாக அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்போர் எண்ணிக்கை, ஆண்டு தோறும் குறைந்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களான துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி போன்ற வற்றில், 1,-000க்கும் குறைவான நபர்களுக்கே பயிற்சி அளிக்கப்பட்டு உள் ளது. தி.மு.க., ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டு களில், 16,000 பேருக்கு மட்டுமே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து ஆதிதிராவிடர் நல ஆர்வலர் சிலர் கூறியதாவது:
படித்து வேலை வாய்ப்பற்ற நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலை வழங்குவது தான், திறன் மேம்பாட்டு பயிற்சியின் நோக்கம்.
ஆனால், தாட்கோ நிர்வாகமும், தமிழக அரசும், இதில் ஒருதலை பட்சமாக செயல்படுகின்றன. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், இத்திட்டத்தில் அதிகம் பயனடைந்து உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, தாட்கோ அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்து, மாநிலம் முழுதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். விருப்பம் உள்ளவர்கள் பயிற்சியில் சேர்கின்றனர்' என்றார்.
விண்ணப்பம் கேட்டால் விரட்டுகின்றனர்
துாத்துக்குடியில் தாட்கோ பயிற்சி குறித்து, இளைஞர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. மாறாக, நாங்களே விசாரித்து கேட்பதற்குள், விண்ணப்பங்கள் முடிவடைந்து விட்டன என, விரட்டுகின்றனர்.
- கோபி, பாதிக்கப்பட்டவர், துாத்துக்குடி
- நமது நிருபர் -