தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/செவிலியர் போராட்டத்தில் தள்ளுமுள்ளு; போலீசார் அடித்ததாக குற்றச்சாட்டு

செவிலியர் போராட்டத்தில் தள்ளுமுள்ளு; போலீசார் அடித்ததாக குற்றச்சாட்டு

செவிலியர் போராட்டத்தில் தள்ளுமுள்ளு; போலீசார் அடித்ததாக குற்றச்சாட்டு


UPDATED : அக் 06, 2026 11:33 PM

ADDED : அக் 06, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 11:33 PM ADDED : அக் 06, 2026 06:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: செவிலியர்கள் போராட்டத்தில், போலீசார் தாக்கியதாக, இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்க தலைவர் சுந்தரி குற்றஞ்சாட்டினார். இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு, அரசு அளித்த உத்தரவாதத்தால், போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை எழும்பூரில், தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கத்தினர், நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம், நிறுத்தி வைக்கப்பட்ட ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைளை முன்வைத்தனர்.

போலீசார் தரப்பில், மாலை 5:00 மணி வரை அனுமதி அளித்த நிலையில், இரவிலும் போராட்டம் தொடர்ந்ததால், மேடையை அகற்றி, மின் இணைப்பை துண்டித்து, செவிலியர்களை வெளியேறும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

ஆனாலும், போராட்டத்தை தொடர்ந்ததால், செவிலியர்களை போலீசார் வலுக்கட்டயமாக துாக்கி சென்று வேனில் ஏற்றினர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கைது நடவடிக்கை எடுப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்த போலீசாரால், செவிலியர்களை அகற்ற முடியவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, சுகாதார துறை செயலர் தாரேஸ் அகமது வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட சங்க தலைவர் சுந்தரி, தி.மு.க., முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோருடன் பேச்சு நடத்தினார்.

அப்போது, வரும் நவ.,3க்குள் ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதனால், நள்ளிரவு 1:00 மணிக்கு, செவிலியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

அச்சங்க தலைவர் சுந்தரி கூறியதாவது:

அரசு செயலர் பேச்சு நடத்தியபோது, செவிலியர்களை வெளியேற்ற போலீசார் நடவடிக்கை எடுத்தனர். போராட்டத்துக்கு, தாயுடன் வந்த குழந்தையை கூட, போலீசார் அடித்துள்ளனர். செவிலியர்கள் மீதும், தடுப்பு கம்பிகளை தள்ளி விட்டனர்.

எனினும், அரசு உறுதி அளித்துள்ளதால், தற்காலிகமாக போராட்டத்தை ஒத்திவைத்துள்ளோம். அதேநேரம், போராட்டத்தில் பங்கேற்ற செவிலியர்கள் மீது, மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயாராவதாக கூறப்படுகிறது.

அப்படி நடவடிக்கை எடுத்தால், தேசிய நலவாழ்வு குழும திட்ட பணியாளர்களையும் ஒருங்கிணைத்து, மாபெரும் போராட்டத்தை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல் தலைவர்கள் கண்டனம்


* தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:
வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு, முதுகில் குத்தும் த.வெ.க., அரசின் துரோகத்திற்கு செவிலியர்கள் இரையாகி உள்ளனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது, போராட்டக்களத்திற்கு சென்று ஆதரவு; தேர்தலின்போது,
பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி; ஆட்சிக்கு வந்தால், காவல்துறை வாயிலாக நடவடிக்கை எடுப்பது. இதுதான், த.வெ.க., அரசின் நிலைப்பாடு.
* அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி:
செவிலியர்கள் மீது நடத்திய, பாசிச அக்கிரமத்தை, 'ரீல்ஸ்' முதல்வர் எப்படி நியாயப்படுத்துவார்? இன்று அமைச்சராக இருப்பவர்களுக்கு, ஆட்சிக்கு வரும் முன், செவிலியர்கள் முன் நின்று பேசியவை எல்லாம் நினைவில் இருக்கிறதா? செவிலியர்களிடம் பேச்சு நடத்துவதை விட, சுகாதார துறை அமைச்சர் அருண்ராஜுக்கு என்ன பெரிய வேலை இருக்கிறது?
* தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்:
'பெண்களுக்கு பிரச்னை என்றால் சும்மா இருக்க மாட்டேன்' என, வீர வசனம் பேசி விட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை தாக்கி இருக்கிறது, மனிதாபிமானமற்ற த.வெ.க., அரசு. எம்.எல்.ஏ.,களுக்கு கார், புதிய தலைமை செயலகம் என அதிவேகமாக செயல்படும் முதல்வர் விஜய், அரசு பணியாளர்களை நிரந்தரம் செய்வதில் மட்டும் மந்தமாக செயல்படுகிறார்.
* பா.ம.க., தலைவர் அன்புமணி:
அனைத்து துறைகளிலும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவதாக, த.வெ.க., அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது நீதியல்ல.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us