பணி நிரந்தரம் கேட்டு நான்கு கட்ட போராட்டம் செவிலியர் மேம்பாட்டு சங்கம் அறிவிப்பு
பணி நிரந்தரம் கேட்டு நான்கு கட்ட போராட்டம் செவிலியர் மேம்பாட்டு சங்கம் அறிவிப்பு
ADDED : மே 02, 2025 11:19 PM
ராமநாதபுரம்:-தமிழகத்தில் எம்.ஆர்.பி., செவிலியர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நான்கு கட்ட போராட்டங்கள் அறிவித்துள்ளனர். எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநில துணைத்தலைவர் வினோதினி கூறியதாவது:
சென்னையில் நடந்த மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நான்கு கட்ட போராட்டங்கள் நடத்தப்படவுள்ளது. மருத்துவப் பணிகள் ஆட் சேர்ப்பு வாரியம் மூலம் தேர்வு எழுதி தேர்வு செய்யப்பட்ட 15 ஆயிரம் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். அவர்களை நிரந்தம் செய்ய வேண்டும். செவிலியர்கள் மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் 12 முதல் 24 மணி நேரம் பணிபுரியும் செவிலியர்களுக்கு பணி நேரத்தை உறுதி செய்ய வேண்டும். இங்கு செவிலியர் கண்காணிப்பாளர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும்.
இங்கு பணியாற்றும் செவிலியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 12 ல் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிய உள்ளோம். மே 20 ல் பணி பாதுகாப்பு, பழைய ஓய்வூதியம் குறித்து அகில இந்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு நடத்தும் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறோம்.
ஜூன் 17 ல் சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் பெருந்திரள் முறையீடு நடக்கிறது. ஜூன் 26 ல் சென்னையில் 24 மணி நேரம் ஒரு நாள் தொடர் தர்ணா நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.