புதிய பணியிடங்கள் கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய பணியிடங்கள் கோரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 21, 2025 06:44 AM

சென்னை: 'தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகளின்படி, பணியிடங்களை உருவாக்க வேண்டும். தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், அச்சங்கத்தின் செயலர் சுபின் பேசியதாவது:
அரசு மருத்துவமனைகளில், 2015ல் ஆண்டு தொகுப்பூதிய முறையில் செவிலியர்களை பணியமர்த்தினர். இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்வோம் என, பணி ஆணை வழங்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் குறைந்த எண்ணிக்கையில் பணி நிரந்தரம் செய்தனர்.
தி.மு.க., ஆட்சியில், அனைத்து செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என, வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தொகுப்பூதிய செவிலியர்களுக்கும், நிரந்தர செவிலியர்களுக்கும் ஒரே விதமான ஊதியம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் அனைத்து செவிலியர்களையும் பணியில் நிரந்தரம் செய்வோம் என்று கூறிவிட்டு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பது கண்டனத்துக்குரியது.
அதேபோல, தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி, புதிய பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. போதிய அளவு செவிலியர்களை நியமிக்கவும் இல்லை.
மாறாக, புதிதாக துவக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு பணியிட மாறுதல் அடிப்படையில், செவிலியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதை தவிர்த்து, போதிய அளவு பணியிடங்கள் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

