ADDED : செப் 23, 2025 10:12 PM
சென்னை:சொத்து வாங்குவோருக்கு தானியங்கி முறையில் பட்டா மாறுதல் வழங்குவதை, வருவாய் துறை அதிகாரிகள் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் உட்பிரிவு தேவை இல்லாத சொத்துக்களை வாங்கும் போது, அதற்கான பட்டாவில் தானியங்கி முறையில் பெயர் மாற்றம் செய்யப்படும்.
இதற்கான பத்திரப்பதிவு நடக்கும் போது, குறிப்பிட்ட சில அடையாள ஆவணங்களை உறுதி செய்தால் போதும்.
புகார்
அதன் அடிப்படையில், பதிவுத்துறை இணையதளத்தில் இருந்து வருவாய் துறையின், 'தமிழ் நிலம்' தகவல் தொகுப்புக்கு விபரங்கள் அனுப்பப்படும். அங்கு, தானியங்கி முறையில் பட்டாவில் பெயர் மாற்றப்படும்.
வருவாய் துறை அதிகாரிகளின் தலையீடு இருக்கக்கூடாது என்பதற்காக, இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. 2020 முதல் இத்திட்டம் அமலில் உள்ளது.
தற்போதும், பெரும்பாலான இடங்களில், வருவாய் துறை உள்ளூர் அதிகாரிகள் தலையீடு இன்றி, பட்டா பெயர் மாற்றம் நடந்து வருகிறது.
ஆனால், சில இடங்களில், தானியங்கி முறையில் பட்டா மாறுதல் பணிகளை, வருவாய் துறை உள்ளூர் அதிகாரிகள் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பொது மக்கள் கூறியதாவது:
பொது மக்கள் எவ்வித பிரச்னையும் இன்றி, பட்டா மாறுதல் பெறுவதற்காக தானியங்கி திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தை முடக்கும் நோக்கில், வருவாய் துறையின் உள்ளூர் அதிகாரிகளான கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்படுகின்றனர்.
தானியங்கி முறை திட்டத்தில் வந்த விண்ணப்ப விபரங்களை பெற்று, அதில் சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் வருமாறு அழைக்கின்றனர். ஆவணத்தில் உண்மையாகவே சந்தேகம் இருந்தால், நேரில் அழைத்து சரிபார்ப்பதில், யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
உறுதி
ஆனால், வேண்டுமென்றே மக்களை நேரில் அழைத்து, அவர்களை அலைக்கழிப்பது, பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக அமைந்துள்ளது. அந்தந்த தாலுகா அளவில், இந்த புகார்கள் கொடுக்கப்பட்டாலும், மேலதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. தானியங்கி பட்டா மாறுதல் திட்டம் தொடர்ந்து செயல்படுவதை, வருவாய் துறை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொதுமக்கள் மட்டுமல்லாது, பதிவுத்துறையில் இருந்தும் இது தொடர்பான புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரிகள் விசாரிக்க துவங்கியுள்ளனர்.