பெங்களூர் நோக்கி சென்ற ஆம்னி பஸ் கவிழ்ந்தது: 30 பேர் காயம்
பெங்களூர் நோக்கி சென்ற ஆம்னி பஸ் கவிழ்ந்தது: 30 பேர் காயம்
ADDED : ஆக 19, 2025 09:04 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கருக்கனஹள்ளி பகுதியில் ஆம்னி பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மதுரையிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் நோக்கி 46 பயணிகளுடன் எஸ்.பி.எஸ்., என்ற தனியார் ஆம்னி பஸ் சென்றது. தருமபுரி அதியமான் கோட்டை முதல் கர்நாடக மாநிலம் நெரலூர் வரை புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே கருக்கனஹள்ளி பகுதியில் ஆம்னி பஸ் விபத்தில் சிக்கியது.
டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை தாண்டி மறுகரையில் உள்ள தருமபுரி சாலையில் 20 அடி ஆழ பள்ளத்தில் பஸ் கவிழந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பஸ்ஸில் இருந்த 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

