அமைச்சரை சந்தித்து பேச இரு நாட்களாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் காத்திருப்பு
அமைச்சரை சந்தித்து பேச இரு நாட்களாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் காத்திருப்பு
ADDED : நவ 16, 2025 01:46 AM
சென்னை: வெளி மாநிலங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் நிறுத்தம் தொடர்பாக, தமிழக போக்குவரத்து அமைச்சரை சந்தித்து பேச, இரண்டு நாட்களாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து, கடந்த 7ம் தேதி கேரள மாநிலம் சென்ற தமிழக ஆம்னி பஸ்களுக்கு, அம்மாநில போக்குவரத்து அதிகாரிகள், 70 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்குவதை நிறுத்தினர்.
ஒன்பது நாட்களாக, ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், இப்பிரச்னைக்கு இதுவரை தீர்வு எட்டப்படவில்லை.
இதுகுறித்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:
மற்ற மாநிலங்களில் இருப்பது போல, தமிழகத்திலும் தேசிய பர்மிட் ஆம்னி பஸ்களுக்கு வரி விலக்கு வேண்டும்.
இல்லாவிட்டால், தமிழக ஆம்னி பஸ்களுக்கு வரி விதிப்போம் என, கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதை கண்டித்து, வெளியூர் ஆம்னி பஸ்களை நிறுத்தி உள்ளோம்.
தமிழக அரசு இந்த பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணவில்லை. அமைச்சர் சிவசங்கரை சந்திக்க நேரம் ஒதுக்குவதாக தெரிவித்தார்.
இரண்டு நாட்களான போதிலும், இதுவரை இன்னும் நேரம் ஒதுக்கவில்லை. சபரிமலை சீசன் துவங்க உள்ள நிலையில், 300 பஸ்கள் இயக்க, உரிய வரி செலுத்தி தயாராக உள்ளோம். எனவே, இனியும் தாமதிக்காமல், தமிழக அரசு எங்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

