
ஜனவரி 6, 1967
சென்னையில், இசையமைப்பாளர், ஆர்.கே.சேகர் -- கஸ்துாரி தம்பதியின் மகனாக, 1967ல் இதே நாளில் பிறந்தவர் திலீப்குமார் எனும், ஏ.ஆர்.ரஹ்மான்.
சிறு வயதிலேயே, 'கீபோர்ட்' வாசிக்க கற்று, தந்தைக்கு உதவிய ரஹ்மான், தன், 9வது வயதில் தந்தையை இழந்து, அவரின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, பத்மா சேஷாத்ரி, எம்.சி.சி., மேல்நிலைப் பள்ளிகளில் படித்தார். தன்ராஜ் மாஸ்டர், 'டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக்' உள்ளிட்டவற்றில் இசை கற்றார். இசையமைப்பாளர்கள் எம்.கே.அர்ஜுனன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்டோரிடம் பணி புரிந்தார். ஆவணப்படங்கள், விளம்பர படங்களுக்கு இசையமைத்த இவர், 1992ல், ரோஜா படத்துக்கு இசையமைத்தார். அந்த துல்லிய இசைக்கு அனைவரும் மயங்கினர். அப்படம் தேசிய விருது பெற்றது.
தொடர்ந்து, பம்பாய், திருடா திருடா, ஜென்டில்மேன், காதலன், கீழக்குச் சீமையிலே, கருத்தம்மா, டூயட், இந்திரா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து, தேசிய அளவில் புகழ் பெற்றார். தொடர்ந்து ஹிந்தி, ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்தார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் இசைக்காக, 'ஆஸ்கர், கோல்டன் குளோப்' உள்ளிட்ட விருதுகளை பெற்றார்.
'பத்ம பூஷன்' உள்ளிட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ள, 'ஆசியாவின் மொசார்ட்' என புகழப்படுபவரின், 57வது பிறந்த தினம் இன்று!