
மார்ச் 13, 1953
தர்மபுரி மாவட்டம், அன்னசாகரத்தில், நாராயண முதலியாரின் மகனாக, 1880, நவம்பர் 4ல் பிறந்தவர் டி.என்.தீர்த்தகிரி முதலியார். நாட்டில் சுதந்திர போராட்டம் நடந்த போது, எதிர் புரட்சியால் பிரிட்டிஷாரை விரட்ட வேண்டும் என்ற கருத்துடைய வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, பாரதியார், வாஞ்சிநாதன் உள்ளிட்டோரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.
அவர்களுடன் இணைந்து, பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். முதலில் திலகரை பின்பற்றிய இவர் பின் காந்தியை பின்பற்றி காங்கிரசில் இணைந்தார். உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு போராட்டங்களில் ஈடுபட்டு, எட்டாண்டுகள் சிறையில் கழித்தார்.
ஆயுர்வேத மருத்துவரான இவர், சிறைக் கைதிகளின் நோய்களை தீர்த்தார். சிறையில் நண்பரான சுப்பிரமணிய சிவா, தன் இறுதிக்காலம் வரை இவருடன் இருந்தார். தர்மபுரியில் பஸ் நிலையம், பூங்கா அமைக்க நிலம் தந்த இவர், 1953ல், தன் 73வது வயதில் இதே நாளில் மறைந்தார். தியாகி தீர்த்தகிரியின் நினைவு தினம் இன்று!

