
ஏப்ரல் 19, 1929
தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூரில், நடிகை நுங்கம்பாக்கம் ஜானகியின் மகளாக, 1929ம் ஆண்டு, இதே நாளில் பிறந்தவர் குமாரி ருக்மணி.
ஹரிச்சந்திரா படத்தில் லோகிதாசனாக நடிக்க சிறுவன் கிடைக்கவில்லை. படப்பிடிப்பு நடந்த மும்பையில், நடிகை டி.பி.ராஜலட்சுமியின் விடுதி அறைக்கு பக்கத்து அறையில் துறுதுறுப்பாக விளையாடிய இவரை, அவர் நடிக்க வைத்தார்.
சிந்தாமணி, பாலயோகினி, தேச முன்னேற்றம், ருஷ்ய சிருங்கர் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார். தன் தாய் ஜானகியுடன், பாக்ய லீலா படத்தில் நடித்தார். ஒய்.வி.ராவ் நடித்த, லவங்கி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, ஒய்.வி.ராவையே மணந்தார். பூலோக ரம்பை, ஸ்ரீவள்ளி படங்களில் கதாநாயகியாக புகழடைந்தார்.
திருமணத்துக்குப் பின், 15 ஆண்டுகள் அம்மா வேடங்களிலும் முத்திரை பதித்தார். கப்பலோட்டிய தமிழன் படத்திற்கு பின் நடிப்பை கைவிட்ட இவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் மீண்டும் நடித்தார். தன் 78வது வயதில், 2007, செப்டம்பர் 4ல் மறைந்தார்.
நடிகை லட்சுமியின் தாய் பிறந்த தினம் இன்று!

