'ஆன்லைன்' பண மோசடிக்கு முயற்சி; ஒரு கோடி அழைப்புகள் முறியடிப்பு
'ஆன்லைன்' பண மோசடிக்கு முயற்சி; ஒரு கோடி அழைப்புகள் முறியடிப்பு
ADDED : ஆக 19, 2025 02:48 AM
சென்னை : கம்போடியா, லாவோஸ், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்ய முயற்சித்த, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மொபைல் போன் அழைப்புகளை போலீசார் தடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சைபர் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
அடிப்படை கணினி அறிவு, தட்டச்சு, ஆங்கில மொழி தெரிந்த இளைஞர்களை குறிவைத்து, சமூக வலைதளம் வாயிலாக இடைத்தரகர்களும், சட்ட விரோதமாக ஆள் சேர்க்கும் நிறுவனங்களும், வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்கின்றன.
அவ்வாறு வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் நபர்கள், மியான்மர், லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட நாடுகளில், 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும், 'சைபர்' அடிமைகளாக மாற்றப்படுகின்றனர்.
இத்தகைய ஆள் கடத்தலை தீவிரமாக தடுத்து வருகிறோம்.
எங்களிடம், 'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்து கைதான நபர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் மொபைல் போன் எண்கள் உள்ளன.
மேலும், லாவோஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்துள்ள அழைப்புகள் குறித்த விபரங்களையும், மொபைல் போன் எண்களின் தரவுகளை பெற்று, மத்திய தொலைத் தொடர்பு துறை அதிகாரி களிடம் ஒப்படைத்து உள்ளோம்.
அவர்கள் வாயிலாக, கடந்த ஏழு மாதங்களாக வெளிநாடுகளில் இருந்து, ஆன்லைன் வாயிலாக பண மோசடிக்கு முயற்சி செய்து வந்த, ஒரு கோடிக்கும் மேற்பட்ட மொபைல் போன் அழைப்புகள், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக தடுக்கப்பட்டுள்ளன.
மேலும், பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட, 7,000க்கும் மேற்பட்ட 'சிம் கார்டு'களையும் முடக்கி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.