ஒரு நாள் வருவாய் ரூ.238 கோடி; பதிவுத்துறையில் புதிய சாதனை
ஒரு நாள் வருவாய் ரூ.238 கோடி; பதிவுத்துறையில் புதிய சாதனை
ADDED : டிச 07, 2024 03:20 AM
சென்னை : வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் அறிக்கை:
தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டும் துறைகளில் முக்கியமானதாக பதிவுத்துறை உள்ளது. பதிவுத்துறை வரலாற்றில், இதுவரை இல்லாத அளவில், நடப்பாண்டு நவம்பர் மாதத்தில், 1,984 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இது, கடந்த ஆண்டு நவம்பரில் ஈட்டப்பட்ட தொகையை விட, 301.87 கோடி ரூபாய் அதிகம்.
மேலும், கார்த்திகை சுபமுகூர்த்த தினமான நேற்று முன்தினம், ஆவணங்கள் அதிக அளவில் பதிவுக்கு தாக்கல் செய்யப்படும் என்பதால், சிறப்பு நிகழ்வாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில், முன்பதிவு டோக்கன்கள், 100லிருந்து 150 ஆக உயர்த்தப்பட்டன.
அதன்படி, அன்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவில், 238.15 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துஉள்ளது.
இதன் வாயிலாக, ஒருநாள் வருவாய் வசூலில், புதிய மைல்கல்லை பதிவுத்துறை எட்டியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.