UPDATED : ஜன 02, 2025 01:32 PM
ADDED : ஜன 02, 2025 01:31 PM

கோவை: கோவையை அடுத்த தோலாம்பாளையம் அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
நீலாம்பதி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் தனது கால்நடைகளை தேடி, வருவாய்த்துறையினருக்கு சொந்தமான காட்டுப்பகுதிக்க சென்றுள்ளார். அப்போது, பொன்னுசாமி,45, என்பவர் தலையில் அடிபட்டு, ரத்த காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தேவராஜ், இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பேரில், காரமடை போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் நடத்திய ஆய்வில், பொன்னுசாமியின் தலை மற்றும் கால் தொடையில் காயம் இருந்தது தெரிய வந்தது. மேலும், அவரது சடலகத்திற்கு அருகே, யானை வந்து சென்றதற்கான கால் தடமும் இருந்துள்ளது. இதன்மூலம், காட்டு யானை தாக்கி பொன்னுசாமி உயிரிழந்திருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பொன்னுசாமியின் உடலை போலீசார் அனுப்பி வைத்தனர்.