கடலுார் சங்கொலிக்குப்பம் மேம்பாலத்தில் ஒருவழி பயணம் : நான்குவழிச் சாலையில் வாகன ஓட்டிகள் திக்... திக்...
கடலுார் சங்கொலிக்குப்பம் மேம்பாலத்தில் ஒருவழி பயணம் : நான்குவழிச் சாலையில் வாகன ஓட்டிகள் திக்... திக்...
ADDED : ஜூன் 01, 2025 04:32 AM

விக்கிரவாண்டி: விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்குவழிச் சாலையில், கடலுார் அருகே சங்கொலிக்குப்பம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணியால், ஒரு வழிப்பாதையில் எதிர் எதிரே வாகனங்கள் செல்வதால் விபத்து அபாயம் எழுந்துள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்குவழிச் சாலையில், முதல் கட்டமாக, விழுப்புரம் ஜானகிபுரத்தில் இருந்து, எம்.என்.குப்பம் வரையிலான 29 கி.மீ., துார சாலை பணிகள் முடிந்து, கடந்த மாதம் 6ம் தேதி, மக்கள் பயன்பாட்டிற்கு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இரண்டாம் கட்டமாக, எம்.என்.குப்பத்தில் இருந்து, கடலுார் பூண்டியாங்குப்பம் வரையிலான 38 கி.மீ., துாரத்துக்கான பணிகளை, திலீபன் கன்ஸ்ட்ரக் ஷன் மேற்கொண்டுள்ளது. இந்த சாலையை போக்குவரத்துக்கு வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இருந்தபோதும், சிறு சிறு பணிகள் நிலுவையில் இருப்பதால், இந்த சாலையை மக்கள் பயன்படுத்த நகாய் 'புரொவிஷனல் கம்ப்ளிஷன்' சான்றிதழ் வழங்கவில்லை.
நான்குவழிச் சாலையில் மேம்பால இணைப்புகளை கட்டுமான நிறுவனத்தினர் தார் கலவை கொண்டு இணைத்திருந்தனர். இந்த இணைப்புகளுக்கு புதிய விதிகளின்படி ஒப்புதல் அளிக்க மறுத்த நகாய், தார் கலவையால் இணைக்கப்பட்டிருந்த பகுதிகளை அகற்றிவிட்டு சிமெண்ட் கான்கிரீட்டால் இணைப்பு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து, சங்கொலிக்குப்பம் - காரைக்காடு இடையிலான ரயில்வே மேம்பாலம் மற்றும் இணைப்பு பகுதியின் கிழக்கு பக்கத்தில் தார் கலவையை அகற்றிவிட்டு, கான்கிரீட் மூலம் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால், காரைக்காடு முதல் சங்கொலிக்குப்பம் வரையில் மேற்கு பக்க சாலையில் மட்டுமே வாகனங்கள் செல்கின்றன. ஒரு வழியில் எதிர் எதிரே வாகனங்கள் செல்லும்போது விபத்துகள் நடக்கும் அபாயம் அதிகம் உள்ளது.
இன்னும் 15 நாட்களில் பணிகளை முழுமையாக முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு சாலை கொண்டு வரப்படும் என நகாய் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைவாக முடிக்க நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த பணி முழுமையாக முடிவடைந்தால், விழுப்புரம் - நாகப்பட்டினம் சாலையில் மொத்தமுள்ள 179.5 கி.மீ., துாரத்தில், விழுப்புரத்தில் இருந்து சட்டநாதபுரம் வரையிலான 123.8 கி.மீ., துாரத்துக்கு மக்கள் எளிதாக பயணிக்க முடியும்.