ADDED : பிப் 14, 2024 02:09 AM
சென்னை:கூடுதல் விலைக்கு காகிதம் கொள்முதல் செய்து, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, லஞ்ச ஒழிப்பு துறை பதிவு செய்த வழக்கில், எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து, மாவட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறைக்கு, 2006 - 2007 காலகட்டத்தில், 5 டன் காகிதம் கொள்முதல் செய்யப்பட்டது.
இதை கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்து, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, தமிழக எழுது பொருள் மற்றும் அச்சுத்துறையின் அப்போதைய கமிஷனர் கே.சம்பத்குமார் ஐ.ஏ.எஸ்., உள்பட எட்டு பேருக்கு எதிராக, 2012ல் வழக்குப்பதிவு செய்தது.
இவற்றில், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை அலுவலர் ரகுபதி, 68, என்பவர் மீதான வழக்கு விசாரணை மட்டும், சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.மணிமேகலை முன் நடந்து வந்தது.
போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கே.உஷாராணி ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'ரகுபதி மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது.
எனவே, குற்றம் சாட்டப்பட்டவருக்கு, இரண்டு சட்டப் பிரிவுகளில் தலா ஓராண்டு சிறை தண்டனையும், தலா 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

