ஆன்லைன் டிக்கெட் வசதியால் அரசு பஸ்களில் முன்பதிவு அதிகம் மே மாதத்தில் 7.74 லட்சம் பேர் பயணம்
ஆன்லைன் டிக்கெட் வசதியால் அரசு பஸ்களில் முன்பதிவு அதிகம் மே மாதத்தில் 7.74 லட்சம் பேர் பயணம்
ADDED : ஜூன் 04, 2025 10:41 PM
சென்னை:அரசு விரைவு பஸ்களில் கடந்த மாதத்தில் அதிகபட்சமாக, 7.74 லட்சம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.
தமிழகத்தில், 8,000க்கும் மேற்பட்ட பஸ்கள், நீண்ட துாரம் செல்லும் வெளியூர் பஸ்களாக இயக்கப்படுகின்றன. சென்னை போன்ற பெரிய நகரங்களில் இருந்து, வெளியூர் செல்லும் விரைவு பஸ்களை வகை பிரித்து, சரியான நேரத்தில் இயக்கும் வகையில், போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, tnstc.in என்ற இணையதளம் அல்லது TNSTC செயலி வாயிலாக, முன்பதிவு செய்யும் வசதியை ஊக்குவித்து வருகிறது.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுக்கு முன், 1,000 பஸ்களில் மட்டுமே முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி இருந்தது. தற்போது, முன்பதிவு வசதி கொண்ட பஸ்களின் எண்ணிக்கை, 2,713 ஆக உயர்ந்துள்ளன. அதேபோல், முன்பதிவு இருக்கைகளின் எண்ணிக்கையும், 1.30 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அரசு பஸ்களில் முன்பதிவு செய்யும் பயணியரை ஊக்குவிக்க, பரிசு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் இரு மார்க்கத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு, 10 சதவீதம் கட்டண சலுகையும் அளிக்கப்படுகிறது.
இதனால், அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும், 7 லட்சத்து, 74,493 பேர் முன்பதிவு செய்திருப்பது புதிய உச்சமாகும். கடந்த ஜனவரியில் அதிகபட்சமாக, 6 லட்சத்து 64,632 பேர் முன்பதிவு செய்திருந்தனர்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், முன்பதிவு வசதி உள்ள அரசு பஸ்களின் எண்ணிக்கையை, 4,000 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

