தமிழகத்தில் 38,188 மருத்துவமனைகள் தான் சட்டப்படி பதிவு பெற்றவை: அரசு தகவல்
தமிழகத்தில் 38,188 மருத்துவமனைகள் தான் சட்டப்படி பதிவு பெற்றவை: அரசு தகவல்
ADDED : மே 21, 2025 12:35 AM
சென்னை:தமிழகத்தில் மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டத்தின்படி, 38,188 மருத்துவமனைகள் மட்டுமே, இதுவரை பதிவு செய்துள்ளதாக, மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம், சிறிய வகை கிளினிக் போன்றவை, எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இயங்கி வந்தன.
அதனால் தமிழக தனியார் மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம், 1997ல் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் டாக்டர்கள் எதிர்ப்பால், விதிமுறைகள் வகுக்கப்படாமல் இருந்தன.
பின், 2018ல் தமிழக மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில், அரசு மற்றும் தனியார் அலோபதி மருத்துவமனைகள் மட்டுமின்றி, சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி மருத்துவமனைகளையும், இச்சட்டத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது.
இவ்வாறு பதிவு உரிமம் பெற, மருத்துவமனைகளில் பராமரிக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச அடிப்படை வசதிகள், டாக்டர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் எண்ணிக்கை போன்றவற்றுடன், தரமான மருத்துவ சிகிச்சை வழங்குவதும் கட்டாயம்.
இந்த நடைமுறைகளை பின்பற்றி, இதுவரை, 38,188 மருத்துவமனைகள் மட்டுமே, மருத்துவ ஊரக நலப் பணிகள் இயக்குனரகத்தில் பதிவு சான்றிதழ் பெற்றுள்ளன.
ஆனால், ஒரு லட்சம் வரை மருத்துவமனைகள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில், மற்ற மருத்துவமனைகள் பதிவு செய்யாமல், விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, மருத்துவ ஊரக நலப்பணிகள் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இந்த சட்டத்தின்படி, அடிப்படை வசதிகள், அவசரகால வசதிகள் உள்ளிட்டவை இருப்பதுடன், மருத்துவமனைகள் பதிவு உரிமம் பெறுவதும் கட்டாயம். புதிதாக மருத்துவமனைகள் திறக்கப்படும்போது, ஆறு மாதத்திற்குள் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். பதிவு செய்யாத மருத்துவமனைகள், கிளினிக்குகள் தொடர்ந்து செயல்பட தடை விதிக்க முடியும்.
இந்த விவகாரத்தில், பதிவு செய்யாத மருத்துவமனைகள், கிளினிக், நர்சிங் ஹோம் உள்ளிட்டவற்றின் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

