அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் ஓய்வு நீதிபதி தலைமையில் கருத்து கேட்பு
அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் ஓய்வு நீதிபதி தலைமையில் கருத்து கேட்பு
ADDED : டிச 29, 2024 12:42 AM
மதுரை:ஹிந்து சமய அறநிலையத்துறைக்கான சட்டத்தில் தற்போதைய சூழலுக்கு ஏற்ப தேவையான மாற்றங்களை கொண்டு வர, ஓய்வு பெற்ற நீதிபதி மதிவாணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு ஜன., 8ல் இணை கமிஷனர்களிடம் கருத்து கேட்கிறது. பொதுமக்கள், ஹிந்து அமைப்புகளிடமும் கருத்து கேட்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
கோவில்களை நிர்வகிக்கவும், பராமரிக்கவும், பாதுகாக்கவும், 1925ல் ஹிந்து சமய அறநிலைய வாரியம் ஏற்படுத்தப்பட்டது. 1951ல் அறநிலையத்துறையாக மாற்றப்பட்டது.
அறநிலையத்துறை சட்டப் பிரிவுகளை அமல்படுத்தவும், தேவையான திருத்தங்கள் செய்யவும், 1959ல் ஹிந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டம் இயற்றப்பட்டு, 1960ல் அமலுக்கு வந்தது.
தற்போதைய சூழல், வளர்ச்சிக்கேற்ப இச்சட்டத்தில் திருத்தங்களை செய்ய ஓய்வு நீதிபதி டி.மதிவாணன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு முதன்முறையாக ஜன., 8ல் சென்னை தலைமை அலுவலகத்தில் இணைகமிஷனர்கள், தலைமையிட அலுவலர்களுடன் ஆலோசித்து கருத்துகளை கேட்க உள்ளது.
பொதுவாக இதுபோன்ற அலுவல் சார்ந்த கூட்டங்களில் நடைமுறையில் உள்ள பிரச்னைகளை அதிகாரிகள் கூறாமல், உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்பதுதான் அதிகாரிகளின் நிலையாக உள்ளது.
என்னென்ன மாற்றங்கள், திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்பது குறித்து பொதுமக்கள், பரம்பரை பூஜாரிகள், அறங்காவலர்கள், ஹிந்து அமைப்புகள் உள்ளிட்டோரிடமும் கருத்து கேட்டு செயல்படுத்த வேண்டும்.
இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் செய்வார் என, ஹிந்து அமைப்புகளின் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.