மும்மொழி கொள்கையை எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியல்: ராமதாஸ்
மும்மொழி கொள்கையை எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியல்: ராமதாஸ்
ADDED : பிப் 20, 2025 06:49 PM
சென்னை:'தமிழை கட்டாய பாடமாக்காமல், மும்மொழி கொள்கையை எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியல்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
உலகின் அனைத்து நாடுகளிலும், தாய்மொழி தான் பயிற்று மொழியாக உள்ளது. தமிழகத்தில், தமிழ் படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற, அவல நிலை நிலவுகிறது. 1999ல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக்கி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. சில மாதங்களிலேயே, அந்த அரசாணை செல்லாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதை விசாரணைக்கு கொண்டு வர, 25 ஆண்டுகளாக தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 10ம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்கி, 2006ல் அன்றைய முதல்வர் கருணாநிதி சட்டம் கொண்டு வந்தார்; இதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
தமிழகத்தில் மும்மொழி கொள்கையை திணிப்பதற்கு, தமிழக அரசும், கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் சரியானது. மும்மொழி கொள்கையை எதிர்ப்பதை விட, தமிழை கட்டாய பாடமாக்குவதும், பயிற்று மொழியாக்குவதும் முக்கியமானது. அதை செய்யாமல் மும்மொழி கொள்கையை மட்டும் எதிர்ப்பது, சந்தர்ப்பவாத அரசியல். தமிழ் மொழிக்கு இழைக்கப்படும் துரோகம்.
எனவே, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, தமிழ் மொழி தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து, தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை கட்டாயப்படமாக்கவும், கட்டாய பயிற்று மொழியாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
***