ADDED : பிப் 05, 2025 10:04 PM
சென்னை:அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 658 சிறப்பு டாக்டர் பணியிடங்களை, நேர்காணல் அடிப்படையில் நியமிப்பதற்கு டாக்டர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு மருத்துவமனைகளில், 207 மகப்பேறு டாக்டர்கள்; தலா, 16 இதய மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை டாக்டர்கள்; 50 தடய அறிவியல் டாக்டர்கள்; 13 முதியோர் நல டாக்டர்கள்; 71 மயக்கவியல் டாக்டர்கள்; தலா 121 பொதுநல மற்றும் அறுவை சிகிச்சை டாக்டர்கள்; 42 கதிரியக்கவியல் டாக்டர்கள்; ஒரு எலும்பியல் டாக்டர் என, 658 சிறப்பு டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இப்பணியிடங்களை நேர்காணல் வாயிலாக, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் நியமிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்கம், அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
'தகுதியான டாக்டர்களை தேர்வு வாயிலாகவே நிரப்ப வேண்டும். நேர்காணல் வாயிலாக நடத்தப்பட்டால் தகுதியற்றோர் சேரும் வாய்ப்பாக அமையும்' என, அச்சங்கத்தினர் கூறியுள்ளனர்.