ADDED : அக் 10, 2024 08:44 PM
சென்னை:வீட்டுவசதி வாரிய ஒருங்கிணைந்த ஒதுக்கீட்டாளர்கள் நலச்சங்க பொதுச்செயலர் கே.ஜெயசந்திரன் கூறியதாவது:
நீண்டகாலமாக தவணை செலுத்தாமல் உள்ள நபர்களின் வீடு, மனை ஒதுக்கீட்டை ரத்து செய்வது, வாரியத்தின் அதிகாரத்துக்கு உட்பட்ட நடவடிக்கை. அதில், எவ்வித பிரச்னையும் இல்லை.
அதே நேரத்தில், இறுதி விலை நிர்ணயிப்பதில் பிரச்னை ஏற்பட்டு, வழக்கு உள்ளிட்ட காரணங்களால் பலரும் தவணை முடிக்காத நிலையில் இருக்கிறோம்.
நிலத்தின் விலை தொடர்பான பிரச்னையில், பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளில், ஒதுக்கீட்டாளர்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தும், அதை அமல்படுத்த வாரிய அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். மேலும், இதில் வாரிய அதிகாரிகளின் தவறான கணக்கீடே பிரச்னைக்கு காரணமாக உள்ளது.
இதுபோன்ற இறுதி விலை தொடர்பான வழக்கில் உள்ள ஒதுக்கீடுகளையும் ரத்து செய்யும் முயற்சியில், வாரிய அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இது, நீதிமன்ற அவமதிப்பு. இந்த விவகாரம் தொடர்பாக, வாரிய நிர்வாக இயக்குனருக்கு மனு அனுப்பி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.