நிதி நிறுவன மோசடியில் கைதான தேவநாதனுக்கு ஜாமின் தர எதிர்ப்பு
நிதி நிறுவன மோசடியில் கைதான தேவநாதனுக்கு ஜாமின் தர எதிர்ப்பு
ADDED : ஆக 08, 2025 12:58 AM
சென்னை:'மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் ஜாமின் வழங்கினால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்பதால், தேவநாதனுக்கு ஜாமின் வழங்கக்கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில், தி ஹிந்து பெர்மனன்ட் பண்ட் என்ற நிதி நிறுவனத்தில், முதலீட்டாளர்களிடம் 24.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதன் இயக்குநர் தேவநாதன், அவரது கூட்டாளிகள் குணசீலன், மகிமைநாதன் உட்பட ஆறு பேரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில், மூன்றாவது முறையாக ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தேவநாதன் உள்ளிட்ட மூன்று பேர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஜாமினில் வெளியே வந்தால் தான், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிப்பதற்கான நிதியை திரட்ட முடியும்.
'சாட்சிகளை கலைக்க மாட்டார். கடும் நிபந்தனைகளை விதித்தாலும் ஏற்றுக்கொள்ள தயார். ஜாமின் வழங்க வேண்டும்' என, தேவநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முதலீட்டாளர்கள் தரப்பில், 'தேவநாதன் தாக்கல் செய்த சொத்துக்களில் பெரும்பாலானவை, மூன்றாம் நபரின் பெயரிலும், நிறுவனங்கள் பெயரிலும் உள்ளன. அதை முடக்குவதில் சிக்கல் ஏற்படலாம்' என்று தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை சார்பில், 'தேவநாதன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து ஆவணங்களின் மதிப்பு, காகிதத்தில் அதிகமாக உள்ளது.
'நிஜத்தில் அதன் மதிப்பு வெறும், 48 கோடி ரூபாய் மட்டுமே. தேவநாதனுக்கு ஜாமின் வழங்கினால், அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, 'நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சொத்துக்களை முடக்குவதில், தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை' என, அதன் உரிமையாளர்கள், நிறுவனங்களிடம் ஒப்புதல் பெற்று, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வரும், 18ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தார்.