ஓட்டுநருடன் கூடிய நடத்துனர் நியமனத்திற்கு எதிர்ப்பு
ஓட்டுநருடன் கூடிய நடத்துனர் நியமனத்திற்கு எதிர்ப்பு
ADDED : மார் 30, 2025 03:16 AM
சென்னை: போக்குவரத்துக் கழகங்களில், 'டிசிசி' எனப்படும், ஓட்டுநருடன் கூடிய நடத்துநர் பணி நியமனத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு போக்குவரத்து கழகங்களில், 3,274 ஓட்டுநர் -- நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதை வரவேற்கிறோம். இன்னும் 27,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றையும் விரைவில் பூர்த்தி செய்ய வேண்டும்.
நீண்ட துாரம் செல்லும் பஸ்களுக்கு ஓட்டுநர் -- நடத்துநர், 'டிசிசி' முறையில் பணியிடங்களை நிரப்பலாம்.
ஆனால், நகரம் மற்றும் புறநகர் பஸ்களில், இந்த முறை சரியாக இருக்காது. இது, தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் சிந்தனையாகும்.
எனவே, தமிழக அரசு, 'டிசிசி' முறையில் பணி நியமனம் செய்வதை கைவிட்டு, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகளை தனித்தனியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.