ரூ.1.77 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் டுவிஸ்ட்! ஓ.பன்னீர்செல்வத்துக்கு வந்த சிக்கல்
ரூ.1.77 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் டுவிஸ்ட்! ஓ.பன்னீர்செல்வத்துக்கு வந்த சிக்கல்
UPDATED : அக் 29, 2024 04:25 PM
ADDED : அக் 29, 2024 04:24 PM

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.
2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடிக்கு சொத்துகள் குவித்ததாக தி.மு.க., ஆட்சியில் வழக்கு பதிவானது. இந்த வழக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி மதுரை மாவட்ட கோர்ட்டில் இருந்து சிவகங்கை மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க., அரியணையில் அமர்ந்த பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை வழக்கில் இருந்து விடுவித்து 2012ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட கோர்ட் உத்தரவிட்டது. இதை மறு ஆய்வு செய்யும் வகையில் வழக்கை சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறார். அவரின் விசாரணைக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடியானது.
இந் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மீதான இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது. இது குறித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது;
வழக்கை இழுத்தடிக்கும் முயற்சியில் ஈடுபட்டால் ஜாமினை மதுரை சிறப்பு கோர்ட்டை ரத்து செய்யலாம். வழக்கு தொடர்பான ஆவணங்களை மதுரை எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பு கோர்ட்டில் நவம்பர் 27ம் தேதிக்குள் மாற்ற வேண்டும்.வழக்கு விசாரணையை நாள்தோறும் நடத்தி 2025ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் மதுரை சிறப்பு கோர்ட் முடிக்க வேண்டும்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் மனைவி உள்ளிட்ட 2 பேர் இறந்துவிட்டதால் அவர்கள் மீதான வழக்கு கைவிடப்படுகிறது.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.