சொத்து குவிப்பு வழக்கு அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து
சொத்து குவிப்பு வழக்கு அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து
ADDED : ஏப் 23, 2025 11:26 PM

சென்னை:வருமானத்துக்கு அதிகமாக, மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் துரைமுருகன், அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கை, ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என, வேலுார் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழக நீர்வளத் துறை அமைச்சராக உள்ள துரைமுருகன், 1996- - 2001ம் ஆண்டில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக, 3 கோடி, 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, 2002ல் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.
அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் சகோதரர் ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து, அவர்களை விடுவித்து, 2007ல் வேலுார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, 2013ல் அ.தி.மு.க., ஆட்சியில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி பி.வேல்முருகன் முன் நடந்து வந்தது. லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், துரைமுருகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, துரைமுருகன் குடும்பத்தினர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆகியோர் வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பி.வேல்முருகன், நேற்று பிறப்பித்த உத்தரவு:
அமைச்சர் துரைமுருகன் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்து, சாட்சி விசாரணையை, வேலுார் சிறப்பு நீதிமன்றம் துவக்க வேண்டும்.
கடந்த 1996- - 2001ம் ஆண்டு காலத்தில் சொத்து சேர்த்த வழக்கு என்பதால், இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து, சிறப்பு நீதிமன்றம் முடிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.