முன்னாள் அமைச்சரின் புகார் முடித்து வைத்த உத்தரவு ரத்து
முன்னாள் அமைச்சரின் புகார் முடித்து வைத்த உத்தரவு ரத்து
ADDED : மார் 29, 2025 08:25 PM
சென்னை:போலீசாருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த புகாரை முடித்து வைத்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலின் போது, 2022ம் ஆண்டு தி.மு.க., பிரமுகரை தாக்கியதாக பதிவான வழக்கில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக, ஜெயகுமார், அவரது மகன் ஆகியோர் சார்பில், காவலர்களுக்கு எதிராக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தரப்பட்டது.
இதை விசாரித்த, மாநில மனித உரிமைகள் ஆணையம் புகாரை முடித்து வைத்து, 2023 ஜூலை, 7ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்தாண்டு ஜெயகுமார் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காவல்துறைக்கு எதிராக, மனுதாரர் தரப்பில் அளித்த புகாரை, மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்காமல் முடித்து வைத்தது தவறு எனக்கூறி, ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தனர். மீண்டும் புகாரை விசாரிக்கவும் ஆணைய தலைவருக்கு உத்தரவிட்டனர்.