திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கிய நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு
திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கிய நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு
ADDED : அக் 04, 2024 07:16 AM

மதுரை: திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய விவகாரத்தில் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என மத்திய உணவு பாதுகாப்புத்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்து திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'மனுதாரர் தரப்பிற்கு விளக்கமளிக்க நோட்டீஸ் அளிக்க வேண்டும். விளக்கத்தின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக, நெய் வழங்கிய திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனம் மீது புகார் எழுந்தது. அதற்கான உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதை எதிர்த்து ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்யப்பட்டது.
நீதிபதி என்.சதீஷ்குமார் விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு: திருப்பதி தேவஸ்தானம், நிறுவனம் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி ஜூனில், 4 டேங்கர்களில் நிறுவனம் நெய் வினியோகித்தது. அது சரியாக உள்ளது என தேவஸ்தானம் நிர்வாகம் தெரிவித்தது.
ஜூலையில் 4 டேங்கர்களில் நெய் அனுப்பப்பட்டது. அது தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டது. அது ஒப்பந்தப்படி தரமாக உள்ளது என ஒப்புக்கொள்ளப்பட்டது.
பின் அரசியல் காரணங்களுக்காக குஜராத்திலுள்ள ஒரு ஆய்வகத்திற்கு நெய் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதிலிருந்து வந்த 2 முடிவுகள் வெவ்வேறாக இருந்தன. அதனடிப்படையில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விளக்கம் கோரி முதலில் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதில், 'நிறுவனத்தின் நெய் விற்பனை தடை செய்யப்படுகிறது. வினியோகித்த நெய்யை திரும்பப் பெற வேண்டும்,' என குறிப்பிடப்பட்டது. மற்றொரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில்,'ஏன் உரிமத்தை ரத்து செய்யக்கூடாது. அக்.2க்குள் விளக்கமளிக்க வேண்டும்,' என குறிப்பிடப்பட்டது.
தேவஸ்தானத்திற்கு விளக்கம் அளித்துவிட்டோம். தவறு எதுவும் நடக்கவில்லை. விளக்கமளிக்க வாய்ப்பளிக்காமல் அவசர கதியில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அத்துறை நெய்யின் மாதிரியை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றது.
அதன் முடிவு வெளிவரவில்லை. மாநில உணவு பாதுகாப்புத்துறை மாதிரியை சேகரித்து கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்திற்கு அனுப்பியது.
அதன் அறிக்கையின்படி எவ்வித தவறும் நடக்கவில்லை என உறுதியாகியுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: மனுதாரர் தரப்பிற்கு விளக்கமளிக்க மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நோட்டீஸ் அளிக்க வேண்டும். விளக்கத்தின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

