வங்கி விடுமுறையால் 'பீஸ்' கட்ட முடியாத மாணவியை கல்லுாரியில் சேர்க்க உத்தரவு
வங்கி விடுமுறையால் 'பீஸ்' கட்ட முடியாத மாணவியை கல்லுாரியில் சேர்க்க உத்தரவு
ADDED : நவ 14, 2025 11:25 PM
சென்னை: தொழில்நுட்பக் கோளாறு மற்றும் வங்கி விடுமுறையால், கட்டணம் செலுத்த முடியாத மாணவியை, மருத்துவ படிப்பில் சேர்த்துக்கொள்ள, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் மாணவி ஷில்பா சுரேஷ்.
இவர், சென்னையில் உள்ள மாதா மருத்துவக் கல்லுாரியில், கடந்த 3ம் தேதி நடத்தப்பட்ட இறுதி கலந்தாய்வில், மருத்துவ படிப்புக்கு தேர்வாகி இருந்தார். இதில் சேர, நவ., 8 கடைசி நாள் என, ஒதுக்கீடு ஆணையில் தெரிவிக்கப்பட்டது.
அதற்குள், 15 லட்சம் ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும் என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, தன் தாயாரின் தங்க நகைகளை அடகு வைத்து, அதன் வாயிலாக கிடைத்த பணத்தை, வங்கிக்கு எடுத்துச்சென்ற போது, நவ., 8ம் தேதி இரண்டாம் சனிக்கிழமை என்பதால், வங்கி விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பணத்தை குறிப்பிட்ட தேதியில் செலுத்த முடியாமல், நவ., 10ம் தேதி கல்விக் கட்டணத்தை செலுத்த முயன்றபோது தொழில்நுட்ப கோளாறால் கட்டணத்தை செலுத்த முடியவில்லை.
இதையடுத்து, கட்டணத்தை செலுத்த கல்லுாரி நிர்வாகத்திடம் அவகாசம் கோரியபோது, அதை ஏற்க கல்லுாரி நிர்வாகம் மறுத்து உள்ளது.
இதை எதிர்த்தும், மருத்துவ படிப்பில் சேர்க்க அனுமதிக்க முடியாது என, கல்லுாரி நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், சென்னை உயர் நீதிமன்றத்தில், ஷில்பா சுரேஷ் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாணவி தரப்பில், வழக்கறிஞர் அபிஷா ஐசக் ஆஜராகி, ''மருத்துவக் கல்லுாரியில் சேர்வதற்கான கட்டணத்தை, கடைசி தேதியான நவ., 8ம் தேதி செலுத்த சென்றபோது, வங்கி விடுமுறை காரணமாக செலுத்த முடியவில்லை.
''மீண்டும் நவ., 10ம் தேதி பணத்தை செலுத்த சென்ற போது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணத்தை செலுத்த முடியவில்லை,'' என்றார்.
இதை ஏற்ற நீதிபதி, மாணவியை மருத்துவ படிப்பில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கும்படி, மருத்துவ கல்லுாரி இயக்குநரக சேர்க்கை குழு மற்றும் கல்லுாரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, நவ., 14ம் தேதிக்குள் கல்வி கட்டணத்தை செலுத்த, மாணவிக்கு அறிவுறுத்தி, மனுவை முடித்து வைத் தார்.

