யானைகள் முகாமில் கால்நடை மருத்துவரை நியமிக்க உத்தரவு
யானைகள் முகாமில் கால்நடை மருத்துவரை நியமிக்க உத்தரவு
ADDED : மார் 02, 2024 02:03 AM
சென்னை:திருச்சி அருகேயுள்ள, எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமில், கால்நடை மருத்துவரை உடனடியாக நியமிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாம் செயல்படுவதற்கு, வழிகாட்டு முறைகள் வகுக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, முரளிதரன் ஆஜராகி, ''எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாம், 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. தற்போது, கோவை மாவட்டம் சாடிவயல் பகுதியில், 8 கோடி ரூபாய் செலவில் புதிய யானை முகாம் அமைக்கப்பட உள்ளது. எம்.ஆர்.பாளையம் முகாமில் உள்ள பெண் யானைகளை, சாடிவயல் முகாமிற்கு மாற்றும் போது, காட்டு யானைகளால் பாதிப்பு வரும். முகாமில் உள்ள யானைகளின் உடலில் புண், காயங்கள் உள்ளன. காட்டு யானைகளுக்கு தொற்று பரவும். சாடிவயல் முகாம் கட்டுமான பணிகளுக்கு டெண்டர் வெளியிட்டு, இறுதி செய்து விட்டனர்,'' என்றார்.
இதையடுத்து, எம்.ஆர்.பாளையம் முகாம் இருக்கும் போது, எதற்கு சாடிவயலில் முகாம் அமைக்கப்படுகிறது என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, சிறப்பு பிளீடர் சீனிவாசன், ''எம்.ஆர்.பாளையம் முகாமில், தண்ணீர் வசதி குறைவாக உள்ளது,'' என்றார்.
அதைத்தொடர்ந்து, முரளிதரன் ''எம்.ஆர்.பாளையத்தில் யானைகளை பராமரிக்க மூத்த பாகன்கள் இல்லை; 25 வயது இளையவர்களை வைத்து பராமரிக்கின்றனர். அவர்களும் சரியில்லை. கால்நடை மருத்துவரும் இல்லை,'' என்றார்.
சிறப்பு பிளீடர் சீனிவாசன், ''ஆனைமலை முகாமில் இருந்து கால்நடை மருத்துவர், மாதம் ஒருமுறை வந்து சிகிச்சை அளிக்கிறார்,'' என்றார்.
அதற்கு, நீதிபதிகள் 'முகாமில், 24 மணி நேரமும் கால்நடை மருத்துவர் இருக்க வேண்டும். எவ்வளவு நாட்களில் நியமிப்பீர்கள்' என கேள்வி எழுப்பினர்.
விரைவில் நியமிப்பதாக, சிறப்பு பிளீடர் தெரிவித்தார். இதையடுத்து, எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமில், உடனடியாக கால்நடை மருத்துவரை நியமிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

