கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் மாணவிக்கு வீடு கட்டித்தர உத்தரவு
கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் மாணவிக்கு வீடு கட்டித்தர உத்தரவு
ADDED : செப் 26, 2025 08:23 PM
சென்னை:'நான் முதல்வன்' திட்டத்தில் படித்து சாதித்த மாணவியின் ஏழ்மை நிலை அறிந்து, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், அவருக்கு வீடு கட்டி கொடுக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற நிகழ்ச்சி, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்து, தனியார் நிறுவனத்தில் வேலை பெற்ற தென்காசியைச் சேர்ந்த பிரேமா என்பவர் பேசினார்.
அப்போது, தான் கல்லுாரி விடுதியில் தங்கி படித்ததாகவும், கஷ்டப்பட்டு படிக்க வைத்த தன் தந்தை, மழையில் ஒழுகும் வீட்டில் வசிப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து அவருக்கு, 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், புதிய வீடு கட்டி கொடுக்குமாறு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவிற்கு இனி வேண்டாம். எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி, உங்களை படிக்க வைத்த தந்தையிடம் முதல் மாத சம்பளத்தை தந்து, நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்.
'உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்கு, புதிய வீடு கட்டி கொடுப்பதற்கான ஆணையை வழங்கி, நான் மகிழ்ச்சி கொள்கிறேன்' என கூறியுள்ளார்.