ரேஷனில் விரல் ரேகை சரிபார்ப்பு வரும் 29க்குள் முடிக்க உத்தரவு
ரேஷனில் விரல் ரேகை சரிபார்ப்பு வரும் 29க்குள் முடிக்க உத்தரவு
ADDED : பிப் 25, 2024 01:09 AM
சென்னை:தமிழகத்தில், 18.61 லட்சம் அந்தியோதயா ரேஷன் கார்டுகள்; 95.66 லட்சம் முன்னுரிமை கார்டுகள் உள்ளன.
அந்தியோதயா பிரிவில் கார்டுக்கு மாதம், 35 கிலோ அரிசியும்; முன்னுரிமை பிரிவு கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா, 5 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த அரிசியை தமிழகத்திற்கு மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது. அந்தியோதயா கார்டுகளில், 65.47 லட்சம் பேரும்; முன்னுரிமை கார்டுகளில், 2.99 கோடி பேரும் உறுப்பினர்கள். அவர்களின் உண்மைத் தன்மையை சரிபார்க்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, ரேஷன் கடைகளில் முன்னுரிமை, அந்தியோதயா கார்டில் உள்ள ஒவ்வொரு நபரின் விரல் ரேகையையும் பதிவு செய்து, 'ஆதார்' வாயிலாக உறுதி செய்யப்படுகிறது. இதுவரை, மொத்த கார்டுதாரர்களில், 66 சதவீதம் பேரின் விபரம் சரிபார்க்கப்பட்டு உள்ளது.
எனவே, மீதியுள்ள பயனாளிகளின் விரல் ரேகை பெறும் பணியை வரும், 29ம் தேதிக்குள் முடிக்குமாறு ரேஷன் ஊழியர்களுக்கு, உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக, கார்டுதாரர் வீட்டிற்கு விரல் ரேகை கருவியை எடுத்துச் செல்லுமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, அதிகாரிகள் நேற்று, ரேஷன் ஊழியர்களுக்கு சிறப்பு கூட்டம் நடத்தி அறிவுறுத்தியுள்ளனர்.