மக்கள் நல பணியாளர்களை ஊராட்சி பணிகளில் ஈடுபடுத்த உத்தரவு; சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு
மக்கள் நல பணியாளர்களை ஊராட்சி பணிகளில் ஈடுபடுத்த உத்தரவு; சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு
ADDED : பிப் 11, 2025 03:19 AM
வடமதுரை : மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை உறுதித் திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் எனும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மக்கள் நல பணியாளர்களை ஊராட்சி, திட்டம் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்த பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
1989---91 தி.மு.க., ஆட்சி காலத்தில் ஊராட்சிகளில் மக்கள் நலப் பணியாளர்கள் பணியிடம் உருவாக்கப்பட்டு அக்கட்சி சார்ந்தவர்கள், குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அதன்பின் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அரசு இவர்களை நீக்கியது. மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வரும் போது பணி வழங்குவது என இருந்தன.
இவர்களுக்கு தற்போதைய தி.மு.க., ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை உறுதித் திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் பணியிடம் ஒதுக்கி அத்திட்டத்தின் கீழ் சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை கமிஷனர் பொன்னையா வழங்கிய உத்தரவில், ஊராட்சி சார்ந்த பணிகள், பதிவேடுகள், ஆவணங்கள் பராமரிப்பு, மத்திய, மாநில அரசின் திட்டங்களை செயல்படுத்துதல், நோய் தடுப்பு பணி, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றில் உதவுதல் என பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்களுக்கு தற்போது வழங்கப்படும் சம்பளம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.