கீழடி அகழாய்வு பொருட்களை அரசிடம் ஒப்படைக்க உத்தரவு
கீழடி அகழாய்வு பொருட்களை அரசிடம் ஒப்படைக்க உத்தரவு
ADDED : மார் 01, 2024 01:10 AM
மதுரை:சென்னை வழக்கறிஞர் கனிமொழிமதி, 2016ல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழாய்வு மேற்கொண்ட இடங்களை மணலால் மூடக்கூடாது. கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து அகழாய்வு பொருட்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.தனபால் அமர்வு விசாரித்தது.
மத்திய அரசு தரப்பு, 'அகழாய்வில் சேகரித்த பல பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைத்துள்ளோம். அவற்றை பாதுகாக்க கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சேகரித்த, 5,765 பழமையான பொருட்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மத்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளன. அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது' என, தெரிவித்தது.
நீதிபதிகள், 'கீழடி அகழாய்வு அறிக்கை, 9 மாதங்களில் வெளியிடப்படும் என, ஏற்கனவே மத்திய அரசு தரப்பு இதுபோன்ற ஒரு வழக்கில் தெரிவித்தது. அறிக்கை வெளியான பின், 5,765 பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அவற்றை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

