சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தோருக்கு ஒரே சான்றிதழ் வழங்க உத்தரவு
சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தோருக்கு ஒரே சான்றிதழ் வழங்க உத்தரவு
ADDED : மார் 17, 2024 05:16 AM
சென்னை : சீர் மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு, இரட்டை ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கு பதிலாக, ஒரே சான்றிதழ் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, ஆங்கிலேயர் ஆட்சியில் குற்றப் பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் வகுப்பு என வகைப்படுத்தப்பட்டு, மிகப் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினருடன் சேர்த்து, 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு, 2008 ஜூலை 29ல் வெளியிட்ட அரசாணையின்படி, சீர்மரபினர் வகுப்பினர் என சான்றி தழ் வழங்கப்பட்டு வருகிறது.
கோரிக்கை
கடந்த 2019 மார்ச் 8ல் வெளியிடப்பட்ட அரசாணையில், மாநில அரசின் இட ஒதுக்கீடு மற்றும் நலத்திட்ட உதவிகள் பெற, 68 வகுப்பினர்களும் சீர் மரபினர், டி.என்.சி., என அழைக்கப்படுவர்.
மத்திய அரசின் நலத்திட்ட பயன்களைப் பெற, சீர்மரபினர், டி.என்.டி., என அழைக்கப்படுவர் என அரசாணை வெளியிடப்பட்டது.
இதனால், 58 சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், இரண்டு வகையான சான்றிதழ் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையை மாற்றி, ஒரே சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சீர் மரபினர் நலச்சங்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.
அரசு நடவடிக்கை எடுக்காததால், நேற்றுமுன்தினம் தேர்தலில் திராவிட கட்சிகளான அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வை புறக்கணிக்க முடிவு செய்து, தங்கள் குல தெய்வ கோவில்களில் சத்தியம் செய்யும் போராட்டத்தை துவக்கினர்.
ஆய்வு
இது குறித்து, நம் நாளிதழில் நேற்று விரிவாக செய்தி வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து, சீர்மரபினர் கோரிக்கையை அரசு ஆய்வு செய்து, அவர்களுக்கு இரண்டு சான்றிதழ்களுக்கு பதிலாக, ஒரே சான்றிதழ் வழங்க, தெளிவுரை வழங்க, முதல்வர் உத்தரவிட்டார்.
நேற்று வெளியிடப்பட்ட புதிய தெளிவுரையின்படி, இனி வருவாய் அலுவலர்கள், சீர்மரபினர் வகுப்பினருக்கு ஒரே சான்றிதழ் வழங்குவர் என, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

