ADDED : ஜூன் 27, 2025 12:32 AM
திருச்சி:தமிழகத்தில், 19 கிளை சிறைகளை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 130க்கும் மேற்பட்ட கிளைச்சிறைகள், மத்திய சிறைகள், பெண்கள் சிறைகள், மாவட்ட சிறைகள் மற்றும திறந்தவெளி சிறைகள் என, 150க்கும் மேற்பட்ட சிறைகள் உள்ளன.
இவற்றில், மதுராந்தகம், திருத்தணி, போளூர், கடலுார் உள்ளிட்ட, 19 கிளை சிறைகளை மூட, கடந்த ஆண்டு சிறைத்துறை உத்தரவிட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், கிளை சிறைகள் மூடப்படாது என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்தார். அப்போது சிறைகள் மூடப்படவில்லை. இந்நிலையில், ஜூன் 23ம் தேதி சிறைத்துறை வெளியிட்ட உத்தரவில், 19 கிளைச்சிறைகளை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளது.
அதில் உள்ள கைதிகளை, அருகில் உள்ள மாவட்ட சிறைகள், மத்திய சிறைகளில் மாற்றி அடைக்கவும், அவற்றில் பணியாற்றும் சிறைத்துறை போலீசாரும், அந்தந்த மாவட்ட மற்றும் மத்திய சிறைகளில் பணியில் சேருமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று முதல், கிளை சிறைகளில் உள்ள கைதிகளை மாற்றும் பணி துவங்கி உள்ளது.
சிறைத்துறையினர் கூறுகையில், 'குற்றங்கள் குறையாத நிலையில் கிளை சிறைகளை மூடுவது நல்லதல்ல. சிறிய குற்றங்களை செய்பவர்கள் தான், கிளை சிறைகளில் அடைக்கப்படுவர்.
'கிளை சிறைகள் மூடப்படுவதால், அவர்கள் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டு, பெருங்குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுடன் சேர்ந்து, குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது' என்றனர்.