ADDED : நவ 26, 2024 03:12 AM
சென்னை: நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்க தடை கோரிய விண்ணப்பத்தின் மீது, ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'அ.தி.மு.க.,வில் உள்கட்சி விவகாரம், கட்சி விதிகளுக்கு முரணாக செயல்பட்டது தொடர்பாக, 2017 முதல் 2022 வரை பல புகார்களை, தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ளேன்.
'கட்சி பிரச்னை தொடர்பாக தாக்கல் செய்துள்ள சிவில் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை, இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்கக்கூடாது எனவும், தேர்தல் ஆணையத்திடம் கோரி உள்ளேன்; எந்த பதிலும் இல்லை. என் மனு மீது விசாரணை நடத்த, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 'கடந்த பிப்ரவரியில் அளித்த விண்ணப்பத்தின் மீது, தேர்தல் ஆணையம் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை' என்று, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் விண்ணப்பத்தின் மீது ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை, டிசம்பர் 2க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.