ஆசிரியர்களின் வெளிநாடு பயணம் விரைவாக அனுமதி தர உத்தரவு
ஆசிரியர்களின் வெளிநாடு பயணம் விரைவாக அனுமதி தர உத்தரவு
ADDED : அக் 25, 2025 07:53 PM
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், வெளிநாடு செல்ல அனுமதி கோரினால், விரைவாக வழங்க பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், தங்களின் மருத்துவ சிகிச்சை, மகளின் பிரசவம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக வெளிநாடு செல்ல, துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரி வருகின்றனர்.
ஆனால், பல அதிகாரிகள் உரிய நேரத்தில் அனுமதி வழங்குவதில்லை. இது குறித்து பாதிக்கப்பட்டோர், பள்ளிக்கல்வி இயக்குநரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
வெளிநாடு செல்வதற்கான விண்ணப்பம் , மாவட்ட கல்வி அலுவலரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே, முதன்மை கல்வி அலுவலரால் பரிசீலிக்க இயலும் என்ற விதியை இனி பின்பற்ற வேண்டியதில்லை.
இனி, அந்தந்த பள்ளிகளின் துறை தலைவர்கள், தலைமை ஆசிரியர்கள் வாயிலாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும். அதை உடனே, பள்ளிக்கல்வி இயக்கக இணை இயக்குநருக்கு அனுப்பி அனுமதி பெறலாம். மேலும், அனுமதி கோருவோர், போலீசாரிடம் தடையில்லா சான்று பெற வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.
போட்டித்தேர்வு
இதற்கிடையில், பள்ளி கல்வித்துறையில், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளி களில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர் களுக்கு, போட்டித்தேர்வு எழுதுவதற்கான அனுமதியை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான, சி.இ.ஓ.,வே வழங்கலாம் என, பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

